சினிமா   விமர்சனம்
சகுனி

சகுனி

 

மகாபாரதத்தில் கெட்ட சகுனி என்றால் அரசியல் சூதாட்டத்தில் விளையாடும் சகலகலாவல்ல நல்ல சகுனி தான் இந்த படத்தின் கதைக்களம்.
காரைக்குடியில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த கார்த்தி தங்கள் சொத்தான அரண்மனையை ரெயில்வே பாலம் கட்ட  இடிக்கப்படும் சூழ்நிலையில் சென்னையில் ரெயில்வே அமைச்சரைப் பார்த்து மனு கொடுக்கச் செல்கிறார். அங்கே அமைச்சரைப் பார்க்க முடியாமல் விரக்தியடைந்து தன் சாதுர்யத்தால் அரசியலில் நுழைந்து   எதிர்கட்சித் தலைவரை முதல்வராக போட்டியிட வைக்கிறார் கார்த்தி. இதில் ஜெயித்தாரா? வீட்டை மீட்டாரா? என்பதே மீதிக் கதை.
கார்த்தி- காரைக்குடி அப்பாவி கமலக்கண்ணனாக சென்னைக்கு வந்ததும் சகுனி கமலாக உருமாறுகிறார்.  காமெடி, காதல், ஆக்ஷன், விஷமத்தனம், நக்கல், நையாண்டித்தனம், சூழ்ச்சி என்று அசல் சகுனியையே நடிப்பில் மிஞ்சிவிடுகிறார். வெல்டன்.
பிரணீதா-ஸ்ரீதேவி என்ற கல்லூரி மாணவியாக ஒரிரு காட்சிகள் வந்தாலும் பளிச்சென தெரிகிறார். 
சந்தானம்- அப்பாதுரை ஆட்டோ டிரைவர் ரஜினியாக உருமாறி கமல் என்கிற கார்த்தியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் அரங்கமே அதிர்கிறது.
பிரகாஷ்ராஜ் - ஆர்.கே. பூபதியாக சிரித்து சிரித்தே தனக்கே உரித்தான வில்லத்தனத்தை அரங்கேற்றும் அரசியல்வாதியாக மின்னுகிறார்.
நாசர்- பீடிசாமி குருஜி தான் படத்தின் ஹைலைட், சில காட்சிகள் வந்தாலும் இன்றைய சாமியார்களின் நிலையையும், ஏமாற்றுத்தனத்தையும் தோலுரித்து நச்சென மனதில் பதிய வைக்கிறார்.
கோட்டா சீனிவாசராவ்-எதிர்கட்சித்தலைவர் பெருமாளாக அவருக்குரிய பாணியில் அளவாக நிறைவாக செய்திருக்கிறார்.
ராதிகா சரத்குமார் - ரமணி ஆச்சியாக வட்டிக்கு விடும் அடாவடி பெண்ணாக கவுன்சிலராகி பின்னர் மேயராகவும், ரோஜா செல்வமணி பரிமளம் கார்த்தியின் அத்தையாகவும், கிரண் ரத்தோட் அரசியல்வாதி வசுந்திராதேவியாகவும் மற்றும் ஆகாஷ், நரேன், டெல்லி கணேஷ், வி.எஸ்.ராகவன், மனோபாலா, சந்திரமோகன், தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், சித்ரா லட்சுமணன் ஆகியோர் படத்தில் முக்கியமான அஸ்திவார கதாபாத்திரங்கள் படத்தின் உயிர் நாடிகள்.
இசை-ஜி.வி.பிரகாஷ் குமார்.கந்தா கார வடை என்ற குத்துப்பாடல், மனசெல்லாம் மழையே -வெல்ல பம்பரம் என்ற காதல் பாடல்கள், போட்டது பத்தலை மாப்பிள்ளை என்ற சரக்கு பாடல் என்று அனைத்து அம்சங்களையும் கலந்து கொடுத்து இளமை துள்ளலுடன் ஆட்டம் போடும் இசையுடன் உற்சாகமூட்டுகிறார்.
ஒளிப்பதிவு -பி.ஜி.முத்தையா. காரைக்குடி அழகையும், சென்னை வாழ்க்கை அத்தனையையும் தன் கேமிரா கோணங்களில் நேர்த்தியாக கச்சிதமாக ஒளிப்பதிவு செய்து, ஆக்ஷன் காட்சிகளிலும் அரசியல் களத்தை அச்சு அசலாக வெற்றி படமாக கொடுத்திருப்பதற்காகவே பாராட்டுக்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-ஷங்கர் தயாள்.என். அரசியல் கலந்த சதுரங்க ஆட்டத்தை முதல் படத்திலேயே தைரியமாக கையாண்டு, புதிய கோணத்தில் தந்து, பெரிய நடிகர்களை அந்தந்த கதாபாத்திரத்தில் புகுத்தி தன் சினிமா தந்திரத்தை அழகாக நகர்த்தி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் ஷங்கர் தயாள்.என்.
ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு, கார்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து வெற்றி முக்கனி  பறிக்க நல்ல சகுனம் இந்த சகுனி.
- பேசும் சினிமா விமர்சனக் குழு





First   <<  1 2 3 4 5 6 7 8 9  >>  Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்