Flash News

கலைப்பூங்கா 60

 

ஆடிப்பட்டம் தேடி விதை… புரட்டாசி சம்பா பொன் போல விளையும்… ஐப்பசியில் அடை மழை… மாசிப்பிறையை மறக்காமல் பார்… என்று எல்லா மாதங்களைப் பற்றியும் பழமொழிகள் உண்டு என்றாலும் சித்திரை மாதத் தொடக்கத்தையே பார்த்தால் 'சித்திரை மழை, செல்வ மழை" , 'சித்திரை மாதத்து உழவு பத்தரை மாத்துத் தங்கம்" என்று பழமொழிகள் இருக்கின்றனவே!

 

சித்திரை ஏப்ரல் மாதத்தில் வருவதால் இதற்கு சில சிறப்புகள் இருக்கின்றன.  இந்த மாதத்தை ஒரு பொன்மாதம் என்றும் சொல்லலாம்.சித்திரை மாதத்தின் ஆரம்பம் வசந்த காலத்தின் துவக்கமாக இருப்பதால் வேம்பு மரங்கள் பூவும், பிஞ்சுமாக காட்சியளிக்கும். மாமரங்கள் செழித்து காய்த்திருக்கும். இதில் ஒரு தத்துவமும் உள்ளது. வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் என்பதே அது.
 
ஏப்ரல் 14ஆம்தேதி வழக்கமாக தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு நம் தாய்மொழியாம் தமிழ் வழி மலரும். ஆனால் இதில் இன்னொரு கூடுதல் சிறப்பு இம்முறை சித்திரை முதல் நாள் ஏப்ரல் 13 ஆம் தேதி பிறக்கிறது.  சித்திரைச் செவ்வானம் மலர்கிறது, முத்திரை பதிக்கிறது.
 
இத்தகைய சிறப்புடன் விளங்கும் சித்திரைத் திருநாளில் தான் 59வருடங்களுக்கு முன்பு  ஏப்ரல் 14 அன்று கலைப்பூங்கா உதயமானது. இன்றும் வீறு நடை போட்டு 60 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்து பெருமையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது கலைப்பூங்கா 60.
 
இப்பொழுதெல்லாம் வெற்றிகரமான 3வது வருடம், அதிரடியான 7வது வருடம், விண்ணதிரும் 10வது வருடம் என்று இந்நாளில் போஸ்டர் அடித்து விளம்பரம் தேடும் பத்திரிகை உலகில் 60ஆம் ஆண்டு கலைப்பூங்கா என்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை எண்ணும் போது இதை நிகழ்த்திகாட்டி கலைப்பூங்காவை தொடர்ந்து படித்து பக்கபலமாக ஊக்கமூட்டி என் எல்லா செயல்களிலும், அதன் வெற்றியிலும் பங்கேற்று மகிழும் என் சக பத்திரிகை நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், திரைத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் இந்த இதழின் வெற்றியில் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கிறது, உங்களால் தான் இந்த சாதனை வெற்றியை படைக்க முடிந்தது என்பதை உளமாற நெஞ்சார்ந்த  மன நிறைவுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இன்று நவீன தகவல் தொழில் நுட்பத்திலும், அதிரடி விஞ்ஞான புதுமைகளிலும் அவசரகதியாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சினிமா உலகம் காற்றிலேறி விண்ணையும் மண்ணையும் தொடும் அளவில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கலைப்பூங்கா பத்திரிகையை 59 ஆண்டுகளுக்கு மேலாக சோதனைகளையும்-வேதனைகளையும், அவமானங்களையும் தாங்கி, தடைகள் பல கடந்து வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று தொடர்ந்து 60வது ஆண்டில் அடியெடுத்து வைத்து பேரும் புகழும் பெருமையும் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் உலகில் பீடு நடை போட்டு வலம் வந்துக் கொண்டிருக் கிறது என்பதில் பெருமை யடைகிறோம்.
 
அன்று கலைப்பூங்கா முழுவதும் சினிமா பத்திரிகையாக வலம் வந்த நேரம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரட்டை வேடத் தில் நடித்தும் இயக்கிய மாபெரும் பொருட்செலவில் உருவான படம் நாடோடி மன்னன் வெளியானது.அப்பொழுது கலைப்பூங்கா புரட்சித் தலைவரின் புகழைப் பாடி நாடோடி மன்னன் சிறப்பு மலர் வெளியிட்டது. வெளியிட்ட சிலநேரங்களில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. இதனால் மறுபடியும் அச்சிட்டு மறுவெளியிட்டு சாதனை படைத்தோம். அதன் பிறகு நூறாவது நாளை கடந்த நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழாவில் பேரறிஞர் அண்ணா கலந்து கொண்டு சிறப்பித்தார். அவ்விழாவை நாடோடி மன்னன் வெற்றி விழா சிறப்பு மலராக வெளியீட்டு வெற்றி கண்டோம். அதன் பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த பெரிய இடத்துப் பெண், கொடுத்து வைத்தவள், பணம் படைத்தவன் ஆகிய பல படங்களின் சிறப்பு மலரை வெளியிட்டு எம்ஜிஆரின் புகழ் மென்மேலும் வளர கலைப்பூங்கா தன் அரிய பங்கை ஆற்றியது.
 
சினிமாவுக்கென்று முழுமையான இதழாக வலம் வந்துக் கொண்டிருந்த கலைப்பூங்கா கடந்த சில ஆண்டுகளாக மாறுதலான  சினிமா செய்திகளோடு அரசியல், இயல்,இசை, நாடக நிகழ்ச்சிகள் என்று புதுத்தெம்போடும் எழுச்சியோடும் மாறுதலுடன் தன்னை புதிய பரிமாணத்துடன் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. 
 
எதிலும் புதுமையுடன் பழமையையும் அறிமுகப் படுத்துவதில் புரட்சி செய்து இன்று 59வயது அனுபவ முதிர்ச்சியில் முதுமை எனும் சறுக்கல் விழாமல் என்றென்றும் வாசக ரசிகர்களின் இதயங்களில் என்றும் இளமை குன்றாமல் மெருகு குறையாமல் 60ம் ஆண்டின் முதல் இதழ் உங்கள் அன்பு கரங்களில் மணம் வீசி தவழ்ந்துக் கொண்டிருக்கிறது கலைப்பூங்கா.
சினிமா மற்றும் அரசியல் உலகின் செய்திகளையும், தகவல்களையும், சினிமா பட விமர்சன அலசல்களையும் எழுதி குவித்திடும். அச்சம் சிறிதுமின்றி துணிச்சலுடன் எதையும் அலசிடும். துச்சமென கருதி துன்;மார்க்கர்களின் சவடால்களையும் சவால்களையும் துணிந்து முகத்திரை யைக் கிழித்திடும்.எதையும் தாங்கும் இதய சுத்தியுடன் தொடர்ந்து களம் காணும்.
 
கலைப்ப+ங்காவில் வெளியிடும் செய்திகளையும், தகவல்களையும் அக்கறையுடன் படிக்கும் பல்லாயிரக் கணக்கான பிரதிநிதிகளாகத் திகழும் முத்திரைப் பதித்து விமர்சிக்கும் வாசகர்களின் பாணியே தனிச்சிறப்பு வாய்ந்தது. அத்துனையையும் பாகுபாடின்றி கசப்பும், இனிப்பும் கலந்து தேன் சொட்டும் மருந்தாக, தேனிலிருந்த பலாச்சுளை போன்றவைகளாவே கருதுகிறோம்.
 
வாசகர்கள் விரும்பி ரசிக்கும் சுவையான எழுத்து, வளமான விமர்சனங்கள், தரமான வாசகர்கள் இம்மூன்றும் ஒருங்கிணைந்து பரந்து விரிந்து தமிழ் சினிமா மண்ணின் எல்லாத் திசைகளிலும் கவரும் வகையில் மணம் பரப்பி வருகிறது கலைப்பூங்கா. மேலும் தொடர்ந்து 60ம் ஆண்டில் கலைத்தோட்டமாக மணம் வீசப் போகிறது.
 
இந்த இதழ் முதல் புத்தம் புதிய செய்தி களைத் தாங்கி சுவைமிக்க தேன் சிந்தும் மலராக மணம் கமழும் செய்தி களை சுவைத்து சந் தோஷிக்கலாம். உங்களுக் காக-உங்களுடன் கடந்த 59 ஆண்டு காலம் வாழ்ந்துக் கொண்டிருக்கும், கலைப்பூங்கா வருகிற ஆண்டுகளிலும் தன் பணியை புத்துணர்ச்சி யோடும் புதுமை கலந்து மனநிறைவுடன் தொடர்ந்து பயணிக்கும்.
 
நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மக்கள் தொடர்பாளர்கள், வாசகர்கள், ரசிகர்கள், விற்பனைமுனைவர்கள், விளம்பரதாரர்கள், மற்றும் திரையுலக முன்னோடி ஜாம்பவான்கள் அனைவரும் என்றென்றும் வழக்கம் போல் தங்கள் நல்லாதரவினை ஒரு நல்ல டானிக்காக எங்களுக்கு கொடுத்து உற்சாகமாக ஊக்கமளிக்க - வேண்டுகின்றோம்-நெஞ்சார்ந்த நன்றியுடன் வேண்டுகின்றோம், விரும்புகின்றோம். 
 
ஆண்டொன்று போனது அகவையொன்று கழிந்தது!
 
கடந்ததில் நடந்ததைக் கணக்குப் பார்ப்போம்!
 
நல்லவை எண்ணி நன்றாய்க் களிப்போம்
 
தீயவை தள்ளித் தூயவர் ஆவோம்!
 
கலைப்பூங்கா 60வை
 
வாழ்த்துங்கள்! வாழ்வோம்! வளர்வோம்!
 
-டி.என்.இராவணன்.





First   <<  1  >> Last
விளம்பரங்கள்
AdSpace
மக்கள் தொடர்பாளர்கள்