

விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட்: 12 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் சாம்பியன்
டாக்கா, மார்ச்.23-
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வங்காளதேசம் அணி வெற்றியை நெருங்கி 2 ரன்னில் கோட்டை விட்டது. அவர்களை வீழ்த்திய பாகிஸ்தான் அணி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
11-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 11-ந்தேதி வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மிர்புரில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான் (9 புள்ளி), வங்காளதேசம் (8 புள்ளி) ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்தியா (8 புள்ளி), இலங்கை (புள்ளி கிடையாது) அணிகள் இறுதி வாய்ப்பை இழந்து தாயகம் திரும்பின.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட்டில் புதிய சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் நேற்று மோதின. வங்காளதேச அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானின் அணியில் ஒரே ஒரு மாற்றமாக வஹாப் ரியாசுக்கு பதிலாக, சர்ப்ராஸ் அகமது சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து 4-வது முறையாக டாஸ் ஜெயித்த வங்காளதேசம் எந்தவித தயக்கமும் இன்றி 2-வது பேட் செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து முகமது ஹபீசும், நசிர் ஜம்ஷெட்டும் பாகிஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர். இந்தியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சதம் அடித்து சாதனை நிகழ்த்திய இந்த ஜோடியால், வங்காளதேசத்தின் மிரட்டலான பந்து வீச்சு மற்றும் துடிப்பான, சுறுசுறுப்பான பீல்டிங்கின் முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஜம்ஷெட் 9 ரன்களிலும், அடுத்து வந்த ïனிஸ்கான் 1 ரன்னிலும் வீழ்ந்தனர். இதில் ïனிஸ்கானுக்கு பந்து பேட்டில் உரசியபடி காலுறையில் பட்ட பந்துக்கு நடுவர் இயான் கவுல்டு தவறான எல்.பி.டபிள்ï. வழங்கி விட்டார்.
இதன் தொடர்ச்சியாக கேப்டன் மிஸ்பா உல்-ஹக் (13 ரன்) ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு அவசரகதியாக ரன்-அவுட் ஆனார். சிறிது நேரத்தில் முகமது ஹபீசும் (40 ரன், 87 பந்து, 4 பவுண்டரி) வெளியேற பாகிஸ்தானின் நிலைமை பரிதாபமானது. விக்கெட் சரிவு மட்டுமின்றி, பாகிஸ்தானின் ரன்வேகமும் தடம் புரண்டது. 11 முதல் 22 ஓவர்கள் வரை ஒரு முறை பந்து எல்லைக்கோட்டுக்கு செல்வதை பார்க்க முடியவில்லை.
அணியை தூக்கி நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹம்மத் அசாம் (30ரன்), உமர் அக்மல் (30 ரன்) முக்கியமான கட்டத்தில் சுழலில் சிக்கினர். 133 ரன்னுக்குள் 6 விக்கெட் (35 ஓவர்) விழுந்ததால் பாகிஸ்தான் 200 ரன்களையாவது தொடுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்-ஹசன், அப்துர் ரசாக் ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை நிமிர விடாமல் கடுமையான நெருக்கடி அளித்தனர்.
இந்த சூழலில் அப்ரிடி கொஞ்சம் நேரம் அதிரடி காட்டி (32 ரன், 22 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளித்தார். அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது போராடினார். ஸ்கோரை கவுரவமான நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற அவரது பலமான முயற்சியால், பாகிஸ்தான் ஒரு வழியாக 200 ரன்களை கடந்தது. அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த வங்காளதேசம் 50-வது ஓவரில் மட்டுமே கோட்டை விட்டது. ஷகதத் ஹூசைன் வீசிய அந்த ஓவரில் 2 நோ-பால், 2 பவுண்டரி உள்பட மொத்தம் 19 ரன்களை பாகிஸ்தான் திரட்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்து சவாலான ஸ்கோரை எட்டியது. சர்ப்ராஸ் அகமது 46 ரன்களுடன் (52 பந்து, 4 பவுண்டரி) இறுதி வரை களத்தில் இருந்தார்.
பின்னர் 237 ரன்கள் இலக்கை நோக்கி தமிம் இக்பாலும், நசிமுத்தினும் வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். தமிம் வழக்கம் போல் தனது அதிரடி தாக்குதலை தொடுத்தார். ஆனால் மறுமுனையில் ரன் எடுக்க தடுமாறிய நசிமுத்தின் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் மந்தமாக ஆடினார். அவற்றை ஈடுகட்டும் வகையில் துரிதமாக ரன் சேகரித்த தமிம் இக்பால் தொடர்ந்து 4-வது அரைசதத்தை அடித்தார். அதாவது இந்த தொடரில் விளையாடிய 4 ஆட்டங்களில் அவர் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த (16.4 ஓவர்) நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. நசிமுத்தின் 16 ரன்களில் (52 பந்து) கேட்ச் ஆனார். அடுத்து வந்த இஸ்லாம் ரன் ஏதுமின்றியும், தமிம் இக்பால் 60 ரன்களிலும் (68 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழந்தனர்.
இதைத் தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனும், நசிர் ஹூசைனும் ஜோடி சேர்ந்தனர். ஆனால் வங்காளதேச பேட்ஸ்மேன்களை எளிதில் ரன்கள் எடுக்க விடாமல், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அப்ரிடி, அஜ்மல், ஹபீஸ் ஆகியோர் முடக்கினர். ஸ்டம்பை நோக்கி துல்லியமாக பந்துகளை வீசி திணறடித்தனர். இருப்பினும் விக்கெட்டை இழக்காமல் பார்த்துக் கொண்டால் கடைசியில் ஒரு கை பார்த்து விடலாம் என்ற நோக்குடன் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் ஆடினர். ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. 30-வது ஓவரில் தான் வங்காளதேசம் 100 ரன்களை கடந்தது.
ஷகிப் அல்-ஹசன் ஓரளவு வேகமாக மட்டையை சுழற்றினார். அணியின் ஸ்கோர் 170 ரன்களாக உயர்ந்த போது, நசிர் ஹூசைன் 28 ரன்களில் (63 பந்து) பெவிலியன் திரும்பினார். அடுத்த ஓவரில் ஷகிப் அல்-ஹசனும் (68 ரன், 72 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆக, மைதானம் ஒரு கணம் அமைதியானது. அது தான் ஆட்டத்தின் போக்கையும் மாற்றி விட்டது. ஆனாலும் பின்னால் வந்த வீரர்களும் கொஞ்சம் ரன்கள் எடுத்ததால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்தது.
கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் 9 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. 50-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அய்சாஸ் சீமா வீசினார். ஆட்டத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது. குழுமியிருந்த வங்காளதேச ரசிகர்கள் தங்கள் அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
முதல் இரு பந்துகளில் 2 ரன்கள் எடுத்த வங்காளதேச பேட்ஸ்மேன்கள், 3-வது பந்தை வீணடித்தனர். 4-வது பந்தில் மக்முதுல்லா 3 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர். 5-வது பந்தை சந்தித்த அப்துர் ரசாக் (6 ரன்) கிளீன் போல்டு ஆனார். இதனால் ஒரு பந்தில் பவுண்டரி அடிக்க வேண்டியதாகி விட்டது. புதியதாக இறங்கிய ஷகதத் ஹூசைன் கடைசிப்பந்தை எதிர்கொண்டார். இவர் தான் பாகிஸ்தான் விளையாடிய போது கடைசி ஓவரில் 19 ரன்களை வாரி இறைத்தவர். அதற்கு பரிகாரம் தேடுவாரா? என்று ஏங்கிய வங்காளதேச ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சீமா வீசிய யார்க்கரில் அவர் ஒரு ரன் மட்டுமே எடுக்க, பாகிஸ்தான் அணி 2 ரன் வித்தியாசத்தில் `திரில்' வெற்றியை பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டது.
வங்காளதேச அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 234 ரன்களே எடுக்க முடிந்தது. இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட ஒரு நாள் தொடரில் இதுவரை வங்காளதேச அணி கோப்பையை வென்றதில்லை. அந்த கனவு மயிரிழையில் நழுவிப் போனதை நினைத்து அந்த அணியின் கேப்டன் முஷ்பிகிர் ரகிம் கண்ணீர் விட்டு அழுதார். பல ரசிகைகளும் தேம்பி தேம்பி அழுததை பார்க்க முடிந்தது.
பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை கைப்பற்றுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு வென்றிருந்தது. அதையும் இதே டாக்கா மைதானத்தில் தான் வென்றிருந்தது. பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் அப்ரிடி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 3 அரைசதம் உள்பட 237 ரன்கள் விளாசியதுடன், 6 விக்கெட்டுகளும் வீழ்த்திய வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஸ்கோர் போர்டு
பாகிஸ்தான்
ஹபீஸ் (சி) நஸ்முல் (பி) ரசாக் 40
ஜம்ஷெட் (சி) மக்முதுல்லா (பி)மோர்தாசா 9
ïனிஸ்கான் எல்.பி.டபிள்ï (பி) நஸ்முல் 1
மிஸ்பா உல்-ஹக் (ரன்-அவுட்) 13
உமர் அக்மல் (சி) முஷ்பிகிர் (பி) மக்முதல்லா 30
ஹம்மத் அசாம் (சி) அண்ட் (பி) அல்-ஹசன் 30
அப்ரிடி (சி) நசிர் (பி) அல்-ஹசன் 32
சர்ப்ராஸ் அகமது (நாட்-அவுட்) 46
உமர்குல் (சி) அல்-ஹசன் (பி) மோர்தாசா 4
சயீத் அஜ்மல் (பி) ரசாக் 4
சீமா (நாட்-அவுட்) 9
எக்ஸ்டிரா 18
மொத்தம் (50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு) 236
விக்கெட் வீழ்ச்சி: 1-16, 2-19, 3-55, 4-70, 5-129, 6-133, 7-178, 8-199, 9-206
பந்து வீச்சு விவரம்
மோர்தாசா 10-0-48-2
நஸ்முல் ஹூசைன் 8-1-36-1
அப்துர் ரசாக் 10-3-26-2
ஷகதத் ஹூசைன் 9-0-63-0
ஷகிப் அல்-ஹசன் 10-1-39-2
மக்முதல்லா 3-0-14-1
வங்காளதேசம்
தமிம் இக்பால் (சி) ïனிஸ்கான்(பி) உமர்குல் 60
நசிமுத்தின் (சி) ïனிஸ்கான் (பி) அப்ரிடி 16
ஜஹூருல் இஸ்லாம் (சி) ïனிஸ்கான் (பி) அஜ்மல் 0
நசிர் ஹூசைன் (சி) மிஸ்பா (பி) உமர்குல் 28
ஷகிப் அல்-ஹசன் (பி) சீமா 68
முஷ்பிகிர் ரகிம் (சி) ஜம்ஷெட் (பி) சீமா 10
மக்முதுல்லா (நாட்-அவுட்) 17
மோர்தாசா (சி) ஜம்ஷெட் (பி) அஜ்மல் 18
அப்துர் ரசாக் (பி) சீமா 6
ஷகதத் ஹூசைன் (நாட்-அவுட்) 0
எக்ஸ்டிரா 11
மொத்தம் (50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 234
விக்கெட் வீழ்ச்சி: 1-68, 2-68, 3-81, 4-170, 5-179, 6-190, 7-218, 8-233
பந்து வீச்சு விவரம்
முகமது ஹபீஸ் 10-0-30-0
உமர்குல் 10-2-65-2
சயீத் அஜ்மல் 10-2-40-2
அப்ரிடி 10-1-28-1
அய்சாஸ் சீமா 7-0-46-3
ஹம்மத் அசாம் 3-0-20-0
***
``முடிவை மாற்றிய ஒரு ஓவர்''
திரில் வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் கூறுகையில், `எல்லா வீரர்களும் இறுதிவரை போராடினர். இது ஒரு அற்புதமான வெற்றி. சர்ப்ராசின் இன்னிங்ஸ் முக்கியமானதாக அமைந்தது. மற்ற ஆடுகளத்தில் இருந்து இந்த ஆடுகளம் வித்தியாசமானதாக, வேகம் குறைந்து (ஸ்லோ) இருந்தது. 225 முதல் 230 ரன்கள் எடுத்தாலே அது போட்டி அளிக்கக்கூடிய ஸ்கோராக இருக்கும் என்று நம்பினோம். சுழற்பந்து வீச்சாளர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். மொத்தத்தில் இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. வங்காளதேசமும் அருமையாக ஆடியது. உண்மையிலேயே இது புதிய வங்காளதேச அணி. அவர்களும் வெற்றியாளர்கள் தான்' என்றார்.
2 ரன்னில் கோப்பையை கோட்டை விட்ட வங்காளதேச கேப்டன் முஷ்பிகிர் ரகிம் கூறுகையில், `இத தொடரில் நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம். மெதுவான இந்த ஆடுகளத்தில் ரன்கள் எடுக்க கடினமாக இருந்தது. ஷகதத் ஹூசைனின் கடைசி ஓவர் தான் (19 ரன்கள் விட்டு கொடுத்தார்) ஆட்டத்தின் போக்கையே மாற்றுவதாக அமைந்து விட்டது' என்றார்.
- J M Haroon All India Under-17 National League Cricket Tournament from 23rd to 26th April 2013
- Rahul Dravid and Sharmila Tagore launch book on Mansoor Ali Khan Tiger Pataudi
- Mandeep and Tarandeep Seal it for Ranchi Rhinos against Uttar Pradesh Wizards
- சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டிப்சரேவிச்&பாடிஸ்டா
- சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சோம்தேவ் தோல்வி - போபண்ணா ஜோடியும் வெளியேற்றம்
- Tomas Berdych meets tennis fans at Aircel Store
- சென்னை ஓபன் டென்னிஸ்:
- ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் தெண்டுல்கர் அறிவிப்பு
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு
- Aircel Chennai Open 2013
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து லட்சுமண் ஓய்வு நிïசிலாந்து தொடருக்கு முன்பே திடீர் முடிவு
- ஐரோப்பிய கால்பந்து போட்டி ஸ்பெயின் அணி மீண்டும் சாம்பியன்
- ஆசிய கோப்பை கிரிக்கெட்: 12 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் சாம்பியன்
- தெண்டுல்கர் 100-100
- உலக கோப்பை கபடியில் இந்தியா சாம்பியன் இறுதி ஆட்டத்தில் ஈரானை வீழ்த்தியது
- CHINMAYA KHEL MILAN
- 16 வயதில் பயப்படாத தெண்டுல்கர் இப்போதா பயப்படுவார்? அக்தருக்கு, வாசிம் அக்ரம் பதிலடி
- எனது பந்து வீச்சை கண்டு தெண்டுல்கர் நடுங்கினார் - சுயசரிதை புத்தகத்தில் அக்தர் பரபரப்பு தகவல்கள்
- ஒரு கண்ணை தானம் செய்த பட்டோடி
- கண் பார்வை பாதித்தும் கிரிக்கெட்டில் பரிணமித்த பட்டோடி
- இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்
- இந்திய ஆக்கி கேப்டன் காதல் திருமணம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையை மணக்கிறார்
- ஓய்வு குறித்து டிராவிட் கருத்து
- டன்கன் பிளட்சர் பயிற்சியில் சதம்
- ஐ.பி.எல். கிரிக்கெட் நிதி முறைகேடு: ரவிசாஸ்திரிக்கு சம்மன்
- இங்கிலாந்தை வீழ்த்தும் இந்தியா: கபில்தேவ் நம்பிக்கை
- இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு
- 100 விக்கெட்டுகள் வீழ்த்தி இஷாந்த் ஷர்மா சாதனை
- 2015 உலகக் கோப்பையில் 14 அணிகள்
- பை ரன்னர் விவகாரம்: ஐ.சி.சி.யின் முடிவுக்கு காவஸ்கர் எதிர்ப்பு
First << 1 >> Last

















































